Wednesday, January 20, 2010

தீர்வுதான் என்ன...?????

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் பொழுது பஸ்ஸில் சென்று வருவதுதான் பழக்கம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் பஸ் பயணம்தான். அந்த பயணங்களின் போது நிறைய அனுபவம் கிடைத்தது. சில அனுபவம் சுவாரஸ்யமானது, சிலவற்றை சொன்னால் ஆண்கள் கோபித்து கொள்வார்கள் என்று ஒரு தயக்கம் இருக்கிறது எனக்கு. நான் ஒரு சில ஆண்களை பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட போகிறேன். அவர்களில் பல வகைகள் இருகிறார்கள்.....அந்த கொடுமைகள் கீழே....


பள்ளியில் படிக்கும் பொழுது நான் ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவள், அதனால் பஸ்ஸில் ஏறியவுடனே டிரைவர் சீட்டின் அருகில் சென்று நின்று விடுவேன். அதுதான் பாதுகாப்பாக கருதினேன். அது உண்மையும் கூட.... ஏன் என்றல் பள்ளி, கல்லூரி விடும் நேரங்களில் மட்டும் சில மனித மிருகங்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஏறுவார்கள், பெண் பிள்ளைகள் நிற்கும் இடமாக பார்த்து வந்து நின்று கொண்டு, எங்கு படிக்கிறாய், அப்டி இப்டி என்று ஏதேதோ பேச்சி கொடுத்து கொண்டே தங்கள் கன்றாவி இச்சையை தீர்த்து கொண்டு, பஸ் எடுத்ததும் இறங்கி விடுவார்கள்.

ஒரு சில கொடிய மிருகங்கள், அருகிலேயே நின்று கொண்டு நம்மை நகர விடாமல் ஐயோ... கடவுளே இதற்கு மேல் என்னத்த சொல்றது. ஓரளவு நான் இவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். திரு திரு என்று முழித்து கொண்டு, எவ்ளோ கூட்டமாக இருந்தாலும் ஒரு கையாலேயே பேலனஸ் பண்ணிக்கொண்டு இன்னொரு கை என்ன பண்ணும் என்று நான் சொல்ல விரும்ப வில்லை, அவன் கண்ணில் பயம் தெரியும் இருந்தாலும் அவனால் ஒழுங்காக தள்ளி நிற்க முடியாது. நாம் போகும் இடம் வரை வந்து பீதியை கிளப்புவார்கள். எனக்கு அழுகையும், கோவமும் கலந்து வரும், இவர்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும் போல தோன்றும்.

இன்னும் சில எருமைகள், மாணவிகள் உட்கார்ந்து இருந்தால் அந்த சீட்டுக்கு அருகில் போயி நின்று கொண்டு........கொஞ்சம் நகர சொன்னால் காதில் விழாதது போல எங்கயோ பார்த்து கொண்டு இருப்பான். இது வரை நான் ஏராளமான சம்பவங்களை பார்த்து விட்டேன், ஒருத்தர் கூட அவர்களை கண்டிக்கவில்லை. பார்த்தாலும் பார்க்காதது போல இருந்து விடுவார்கள். எந்த பெண்ணும் அவர்களை எதிர்த்து எதும் பேசி நான் பார்த்ததில்லை.

ஒரு உண்மை என்னவென்றால் கல்லூரி மாணவர்களை கூட நம்பி அருகில் நின்று 100 கி.மீ. பயணம் செய்து விடலாம்,. ஆனால் ஒரு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் சில ஆண்களை மட்டும் நம்பி ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது. இது எவ்ளோ உண்மை என்று பெண்களுக்கு நிச்சயம் தெரியும்.

இன்றும் நான் பஸ்சில் போகும்போது கவனித்திருக்கிறேன், சில குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இன்றைய பெண் குழந்தைகள் மிக சீக்கிரம் உடல் வளர்ச்சி அடைந்து விடுகிறார்கள். அதனால் நம் கண்களுக்கு குழந்தையாக தெரியும், ஆனால் "அதுங்களுக்கு"??????....


இதையெல்லாம் நிச்சயம் தடுக்க முடியாது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நிச்சயம் அவர்களை அருகில் அழைத்து எல்லாவற்றையும் சொல்லி தரவேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள்தானே? ஒரு நிமிடம் அப்படி நினைத்தால் இது போன்ற கொடுமைகள் நடக்காது. வெட்டு, குத்து, கொலை, குண்டு வெடிப்பு இப்படி நிறைய செய்திகள் படித்து உச்சி.. கொட்டி நாமும் வேதனையை தெரிவித்து விடுவோம். நானும்தான். ஆனால் இந்த கொடுமையை நான் நேரிலேயே பார்த்து, துடித்து இருக்கிறேன். என்னால் இன்றும் சிலவற்றை மறக்க முடியவில்லை. தினமும் செய்திதாளில் பார்த்தால், ஆசிரியரே மாணவியை கற்பழித்ததாக செய்திகள் நாள் தோறும் வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு தீர்வுதான் என்ன...?????